உலகிலேயே மிகப் பெரிய மலர் எந்த தேசத்தில் உள்ளது? தென் கிழக்கு பசிபிக் நாடான இந்தோனேஷியாவில் சுமாத் திரா தீவில் உள்ளது. பூமியில் வேறு எங்கும் காண முடியாத பல அற்புத மலர்கள் இங்கே காணப்படுகின்றன. அவற்றில் ராபிள்ஸியா ஆர்னால்டு என்ற மலரும் ஒன்று! உலகிலேயே இதுதான் மிகப் பெரிய மலர். ஒரே ஒரு மலரின் எடை மட்டும் 7 கிலோ வரை இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குறுக்களவு 3 அடி. மகரந்தத் தண்டுகளையும், தேன் பையையும் தாங்கி நிற்கும் மையப் பகுதி மட்டும் 30 செ.மீ. குறுக்களவில் இருக்கும். பூவின் மெல்லிய இதழோ 60 மில்லி மீட்டர் தடிமன் கொண்டது. இதன் அதிகபட்ச தடித்த பாகம் 180 மி.மீ. தடிமனில் இருக்கும்.
பூவின் நடுவில் உள்ள கிண்ணம் போன்ற பகுதி யில் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றலாம். அந்தளவுக்கு மிகப்பெரிய கிண்ணம் போன்ற பள்ளம் உள்ளது. இந்த நிறம் என்று எதையும் வரையறுத்துச் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு ஆக்டோபஸ் உடலின் மேற்புறம் போன்ற நிறத்தில் இருக்கும். கிட்டத்தட்ட மாமிசம் போன்ற தோற்றத்தில் இருக்கும். இதன் மொட்டு பெரிய முட்டைக்கோஸ் போன்ற தோற்றத்தில் காணப்படும். ஒரு பூ மொட்டு நிலையில் இருந்து முழு வளர்ச்சி அடைந்து மலர்வதற்கு சுமார் ஒரு மாதம் ஆகும். சரி... மலர்ந்தவுடன் நல்ல மணம் வீசும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்! ஏனெனில், இது மலர்ந்ததும் துர்நாற்றம் வீசும். யாரும் இதை ஒரு மலர் என்றே நினைக்க மாட்டார்கள். மலர்ந்து ஒன்றிரண்டு நாட்கள் ஆனபின் வாடிவிடும். அதோடு மலர் காலி.1918ம் ஆண்டு ஸ்டாம் போர்ட் ராபளீஸ் மற்றும் ஆர்னால்டு என்ற இரு ஐரோப்பியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுமாத்தி ராவுக்கு வந்தனர். அப்படி வந்த இவர்கள், ஆய்வில் ஈடுபட்ட போதுதான் இந்த பிரமாண்ட மலரைக் கண்டனர்.
ராப்ளீஸும், ஆர்னால்டும் சேர்ந்து கண்டதால் அவர்களின் பெயரைக் கொண்டே ‘‘ராப்ளீஸியா ஆர்னால்டு’’ என்று இதற்கு பெயர் சூட்டி னார்கள்.
இந்தச் செடி ஒட்டுயிர் வகையைச் சேர்ந்தது. எனவே மற்ற தாவரங்களின் தண்டுகளிலும் வேர்களிலும் ஒட்டிக்கொண்டு வளர்கின்றது. இதற் கென்று தனியாக இலையோ தண்டோ கிடையாது. மற்ற செடிகளைப் போல இதனால் பூமியில் இருந்து தண்ணீர் மற்றும் உப்புச் சத்தைக் கிரகிக்கவும் முடியாது. இதேபோன்று கிழக்காசி யாவில் ‘‘ஸ்டிங்கிங் கார்ப்ஸ் விலி’’ என்று மற்றொரு பெரிய மலரும் இருக்கிறது. இதுவும் பெரிய மலர்தான். இதிலும் துர்நாற்றம் வீசும். ஆனால், இது ராப்ளீஸியா ஆர்னால்டு மலர் அளவுக்கு பிரமாண்டம் இல்லை!











Leave a comment