பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 2- வகுப்பு ரெயில் கட்டண உயர்வு வாபஸ்: பாராளுமன்றத்தில் புதிய மந்திரி அறிவிப்பு
பாராளுமன்றத்தில் கடந்த 14-ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டை அப்போது ரெயில் மந்திரியாக இருந்த தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். இதில் சாதாரண ரெயில், புறநகர் ரெயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 5 பைசாவும் ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. 2-ம் வகுப்பு ஏ.சி. சேர்கார் ஆகியவற்றின் கட்டணங்கள் கிலோ மீட்ட ருக்கு 30 பைசா வரை உயர்த்தப்பட்டது.
ரெயில் கட்டண உயர்வுக்கு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தினேஷ் திரிவேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ராஜினாமா செய்யுமாறு அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்த அன்றே உத்தர விட்டார். இதனால் மத்திய அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது.
இது தொடர்பான சமரச முயற்சியை ஏற்க மம்தா பானர்ஜி மறுத்து விட்டார். கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட வேண்டும், தினேஷ் திரிவேதியை நீக்கி விட்டு தனது கட்சியைச் சேர்ந்த முகுல்ராயை ரெயில் மந்திரியாக நியமிக்க வேண்டும் என்று உறுதிப்பட தெரிவித்தார்.
வேறு வழியின்றி மத்திய அரசு இதை ஏற்றுக்கொண்டது. தினேஷ் திரிவேதி ரெயில்வே மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப்பதில் முகுல்ராய் புதிய ரெயில் மந்திரியாக பொறுப்பேற்றார். அடுத்த கட்டமாக ரெயில் கட்டண உயர்வும் இன்று வாபஸ் பெறப்பட்டது. இன்று பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் ரெயில் மந்திரி முகுல்ராய் கட்டண உயர்வு வாபஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்புக்கான கட்டண உயர்வையும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம், ஏ.சி. சேர்கார், ஏ.சி. 3-ம் வகுப்பு கட்டண உயர்வையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார். அவற்றுக்கான பழைய கட்டணமே நீடிக்கும். அதே சமயம் ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டண உயர்வில் மாற்றம் செய்யப்படவில்லை. அவற்றுக்கான கட்டண உயர்வு நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
கட்டண உயர்வை திரும்ப பெறுவதற்கான தீர்மானத்தை ரெயில் மந்திரி முகுல்ராய் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.











Leave a comment