கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே முழுவதும் வழங்கவேண்டும்: தஞ்சையில் தா.பாண்டியன் பேட்டி
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என்று தா.பாண்டியன் கூறினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை வரவேற்கிறோம். அறிவித்து உள்ள ரூ.500 கோடி திட்டத்தினை பட்ஜெட் அறிவிப்பிலேயே சேர்க்க வேண்டும். போராட்டக் குழுவினரையும் அழைத்து பேசவேண்டும்.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழ் நாட்டில் நிலவும் மின் தட்டுபாடு தீரும் வகையில் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இதனை வலியுறுத்தும்.
அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடும் குழுவினர் மத்திய-மாநில அரசு பிரதிநிதிகளுடன் கலந்து பேசி பாதுக்காப்புக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பிற பகுதி நலனை மறந்து கூடங்குளத்தில் வசிப்போர் தடுக்கும் நிலையில் ஈடுபட வேண்டாம். மத்திய அரசு வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்த மறுநாளே மத்திய ரெயில்வே அமைச்சர் மாற்றப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது மத்திய அரசு கட்டுப்பாட்டை இழந்து இருப்பதை காட்டுகிறது. வரிக்கொள்கையை பொறுத்தவரை இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.30 ஆயிரம் கோடி திரட்ட இருப்பதை கைவிட வேண்டும். மறைமுகவரியாக ரூ.48 ஆயிரம் கோடி விதித்து இருப்பதும், மானியத்தை குறைப்பதும் மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.ரூ.ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கி இருப்பது உத வாத செயலாகும்.
125 போர் விமானங்கள் வாங்க இருப்பது அரசின் அகம் பாவத்தினை காட்டுகிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துறை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது கண்டனத்திற்குரியது.
மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரங்களில் தேவையற்ற நிலையில் நுழைந்து இந்தியாவின் ஒருமைப்பாட்டை நிலையை சீரழித்து வருகிறது. இது குறித்து பாட்னாவில் நடைபெற உள்ள அகில இந்திய இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் விவாதிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட துணை செயலாளர் உத்திராபதி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.











Leave a comment