பட்டுக்கோட்டை- தஞ்சை-அரியலூர் அகல ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்பது பட்டுக்கோட்டை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். படிப்பு, வேலை மற்றும் பல்வேறு முக்கிய பணிகளுக்காக இந்த பகுதி மக்கள் தஞ்சை செல்ல வேண்டிய சூழ்நிலையே இன்னும் நிலவி வருகிறது. எனவே இந்த ரெயில்பாதை பணியை உடனே தொடங்க வேண்டும் என்று பல வருடங்களாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்த பணிக்காக 1934ல் நிலம் கையப்படுத்தப்பட்டது. பிறகு 2000-ம் ஆண்டில் அகல ரெயில்பாதை அமைக்க மறுசர்வே செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை ரெயில் பாதை அகைக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று பட்டுக்கோட்டையில் அனைத்து கட்சியினர், அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த போராட்டத்துக்கு கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டாக்டர் செல்லப்பன், நகர செயலாளர் சுகுமார், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் மணிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வக்கீல் காமராஜ் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்துக்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக இருசக்கர வானங்களில் தஞ்சைக்கு ஊர்வலமாக சென்று கலெக்டரிம் மனு கொடுப்பது போன்ற தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று போராட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர்.











Leave a comment