தஞ்சாவூர்: மன்னார்குடி-பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மன்னார்குடி, பட்டுக்கோட்டையை இணைக்கும் புதிய அகல ரயில் பாதை அமைப்பதுக்கான திட்டத்தை ரயில்வே துறை அறிவித்து, அதற்கான நில சர்வே பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தால் 350 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும்.
இப்பகுதியில் வசிக்கும் ஒன்றரை லட்சம் பேரின் வாழ்வாதாரம் சிரமத்துக்குள்ளாகும் என வலியுறுத்தி அகல ரயில்பாதை எதிர்ப்புக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரனிடம் நேற்று மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில்பாதை 42 கி.மீ., தூரத்தில் அமைகிறது. இதற்கு, இடைப்பட்ட பகுதியில் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய இரு மாவட்டங்களை சேர்ந்த 21 கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு 1.50 லட்சம் மக்கள் உள்ளனர். பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி, பரம்பரை பரம்பரையாக வசிக்கின்றனர்.
கண்ணன் ஆறு, பாட்டுவனாச்சி, நசுவினி ஆறு போன்ற காட்டாறுகளும், பாமினியாறு, கல்யாண ஓடை வாய்க்கால், தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால் போன்ற பாசன வாய்க்கால்களும் உள்ளது. இவற்றில் குறுக்கே ஏழு ஆற்றுப்பாலங்களும் புதிய ரயில்பாதைக்காக கட்டப்பட வேண்டும்.
இடையே குறுக்கிடும் நெடுஞ்சாலைகளில் ஒன்பது மேம்பாலங்கள் கட்டவும் பல கோடி ரூபாய் செலவிட வேண்டும். மேற்கண்ட திட்டத்துக்காக 350 ஏக்கர் விவசாய நிலங்களை ரயில்வேதுறை கையகப்படுத்த வேண்டும். இதனால், மா, தென்னை விவசாயம் அடியோடு அழியும். 1.50 லட்சம் மக்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
இதுதவிர, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான ஏரி, குளங்கள், ஃபோர்வெல்களையும் புதிய திட்டத்துக்காக அழிக்க நேரிடும். இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் மன்னார்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு 32 கி.மீ., தூரம் உள்ளது. மூன்று வழித்தடத்தில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை பஸ் வசதி ஏற்கனவே உள்ளது.
மன்னார்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆறு கி.மீ.,தூரத்தில் உள்ள மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு போக்குவரத்து வசதி இல்லை. இதற்கான ஆட்டோ கட்டணம், ரயில்வே கட்டணம் சேர்த்து 75 ரூபாய் செலவாகும்.
ஆனால், தற்போது பஸ்ஸில் வெறும் 15 ரூபாய் செலவில் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு பொதுமக்கள் சென்று விட முடிகிறது. இடைப்பட்ட தூரத்தில் முக்கிய சுற்றுலா தலம் ஏதும் இல்லாததால் வேறு ரயில்வே ஸ்டேஷன்களை அமைக்க முடியாது.
அதனால், புதிய திட்டத்தால் அரசுக்கு எவ்விதத்திலும் வருவாய் கிடைக்காது. விவசாயத்தை பாதிக்கும் வகையிலும், 1.50 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை சிதைத்தும், வீணாக போடப்பட்டுள்ள புதிய அகல ரயில்பாதை திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.



These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment