ரஷ்ய பயணிகள் விமானம் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறங்க முயன்றபோது, தரையில் மோதி இரண்டாக உடைந்து நொறுங்கியது. இதில் 31 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ரஷ்யாவின் ஏடிஆர்.72 என்ற பயணிகள் விமானம், நேற்று காலை சைபீரியாவின் டியுமென் விமான நிலையத்தில் இருந்து சர்கெட் நகருக்கு புறப்பட்டது. அதில் 2 பைலட்கள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் என மொத்தம் 43 பேர் இருந்தனர். 30 கி.மீ. தூரத்தில் நடுவானில் பறந்தபோது திடீரென தரையை நோக்கி பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தரையில் மோதி தீப்பிடித்து 2 துண்டாக நொறுங்கியது.
விமான விபத்தை நேரில் பார்த்தவர்கள் சைபீரிய எமர்ஜென்சி அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 12 பேரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். விபத்தில் பலியான 31 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. இதுகுறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் இரினா ஆண்டிரிநோவா கூறுகையில், ''விபத்தில் பலியான 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்க பைலட் முயன்றபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. பைலட்களின் தவறாகவும் இருக்கலாம். பைலட் அறையின் தகவல் பரிமாற்றங்களை பதிவு செய்யும் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது. அதை ஆராய்ந்த பிறகே காரணம் தெரிய வரும்'' என்றார்.











Leave a comment