இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 5வது சீசன் தொடக்க விழா சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி, பிரபுதேவா, சல்மான் கான், கரீனா கபூர் உட்பட பிரபலங்கள் பங்கேற்றனர். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து கிரிக்கெட்டின் புதிய பரிமாணமாக 20 ஓவர் போட்டிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், கடந்த 2008ல் தொடங்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் டி20 போட்டித் தொடர் வெற்றிகரமாக 5வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
அணிகளின் உரிமம், வீரர்களுக்கான ஒப்பந்தம் எல்லாமே சர்வசாதாரணமாக கோடிகளில் புழங்கும் ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்களுடன் வெளிநாடுகளை சேர்ந்த பிரபல வீரர்களும் இணைந்து விளையாடுகின்றனர். கடந்த ஆண்டு விளையாடிய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், இம்முறை 9 அணிகள் மட்டுமே களமிறங்குகின்றன. மொத்தம் 54 நாட்களில் 76 போட்டிகள் நாடு முழுவதும் 12 மைதானங்களில் நடைபெற உள்ளன.
முதலாவது சீசனில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்து 2009ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த 2வது சீசனில் கில்கிறிஸ்ட் தலைமையிலான ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 2010 மற்றும் 2011ல் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் கோப்பையை வென்றுள்ளன.
இந்த ஆண்டும் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், 5வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் சென்னை . மும்பை அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டி உட்பட சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 8 லீக் ஆட்டங்களும் ஒரு பிளே ஆப் மற்றும் பைனல் என மொத்தம் 10 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மே 27ம் தேதி இறுதிப் போட்டி நடக்க உள்ளது.
இந்த நிலையில், 5வது சீசனுக்கான வண்ணமயமான தொடக்க விழா சென்னையில் இன்று தொடங்கியது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த இந்த விழாவில் டோனி, ஹர்பஜன், டிராவிட், கங்குலி உட்பட 9 அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழி ஏற்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி இந்தியாவில் முதல் முறையாக இசை மழை பொழிகிறார்.
பிரபுதேவா, கரீனா கபூர் நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். சல்மான் கான், பிரியங்கா சோப்ரா என நட்சத்திர பட்டாளமே அணிவகுப்பதால், தொடக்க விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பலத்த பாதுகாப்பு: ஐபிஎல் சீசன் 5 தொடக்க விழாவுக்காக பிரபல வீரர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் சென்னையில் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் தொடக்க விழா இரவு 7.30க்கு தொடங்குகிறது.
* தொடக்க விழா சோனி செட் மேக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
* சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடி, 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7.5 கோடி பரிசு காத்திருக்கிறது. மூன்றாவது மற்றும் 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3.75 கோடி கிடைக்கும்.
* நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாழ்த்தி ‘வா மச்சான் வா’ என்ற பாடலை சென்னை ரைனோஸ் அணி கேப்டன் விஷால் (செலிப்ரிடி லீக் கிரிக்கெட்) சென்னையில் நேற்று வெளியிட்டார்.
* ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், எஸ்36 என்ற அவரது இசைக் குழுவினருடன் இணைந்து ஏப்.6ம் தேதி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இசை மழை பொழிய உள்ளார்.











Leave a comment