ஐபிஎல் 20-20 ஐந்தாவது சீசன் போட்டி தொடக்க விழா, சென்னையில் நாளை மாலை கோலாகலமாக நடக்கிறது. இதில் அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, நடிகர் அமிதாப்பச்சன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 20-20 போட்டிகள், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 4 சீசன் போட்டிகள் நடந்துள்ளன. இதைத் தொடர்ந்து 5-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை மறுநாள் (4-ம் தேதி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
5-வது சீசனை பிரமாண்ட துவக்க விழாவுடன் நடத்த ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை வண்ணமயமான துவக்க விழா நடக்கிறது. பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி கலந்து கொண்டு உற்சாகத்தோடு பாடுகிறார். நடிகர் அமிதாப்பச்சன், நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், பிரபுதேவா ஆகியோரது நடனங்களும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. தொடக்க விழாவை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
தொடக்க விழா நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும், சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர்.

நாளை மறுநாள் தொடங்கி 51 நாட்களுக்கு இந்த திருவிழா நடக்கிறது. மொத்தம் 76 ஆட்டங்கள் நடக்க உள்ளன. நடப்பு சாம்பியன் சென்னை, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூர், புனே, ஐதராபாத், டெல்லி ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 9 ஆட்டங்கள் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 லீக் ஆட்டங்களில் இங்கு மோதுகிறது. இதுதவிர 1 பிளேஆப் சுற்று ஆட்டமும் இறுதிப்போட்டியும் இங்கு நடக்கிறது. இதுதவிர மும்பை, டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், தர்மசாலா, புனே, விசாகப்பட்டினம், மொகாலி, கட்டாக் ஆகிய நகரங்களிலும் போட்டி நடக்கிறது. நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் துவக்க ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.

இறுதிப்போட்டி மே 27-ம் தேதி நடக்கிறது. புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 3 ஆட்டங்கள் நடக்கிறது. முதல் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்த அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். இது எலிமினேட்டர் சுற்றாக கருதப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த சீசனில் பல்வேறு முன்னணி அணியில் ஆடிய நட்சத்திர வீரர்கள் வேறு அணிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் சர்வதேச போட்டிகளில் ஆடி வருவதால் அந்த அணியை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் இணைய உள்ளனர்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment