தமிழக அரசு வல்லுநர் குழுவுடன் போராட்டக் குழு இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முடிந்தது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பான நிலையில் தான் உள்ளது என்று வல்லுநர் குழுவில் உள்ள சீனிவாசன் கூறியுள்ளார். இதனையடுத்து, உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவுடன் வல்லுநர் குழு பேச்சு நடத்தியது. ஆலோசனை கூட்டத்தில் தமிழக வல்லுநர் குழுவினர் விஜயராகவன், இனியன், அறிவொளி, சீனிவாசன் பங்கேற்றனர்.
பேரலை வந்தாலும் பாதிக்காத அணுமின் நிலையம்
ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக வல்லுநர் குழு ''பேரலை வந்தாலும் பாதிக்காத உயரத்தில் அணுமின் நிலையம் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 25 அடி உயரத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்கள். மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 திறன் கொண்ட நிலநடுக்கம் தாக்கினாலும் உலைக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்கள். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் 'மக்களின் பிரதிநிதிகளை சந்தித்ததால் மக்களின் உணர்வுகளை அறிய முடிந்தது. உணர்வுகளை புரிந்து கொண்டதால் மக்களை நேரடியாக சந்திக்க தேவையில்லை' இவ்வாறு கூறினார்கள்.
மக்களின் அச்சத்தை தவிர்ப்பது எங்கள் பணி அல்ல
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்களின் அச்சத்தை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக அரசு வல்லுநர்களிடம் கேட்டதற்கு 'மக்களின் அச்சத்தை தீர்க்க வேண்டியது தங்கள் பணி இல்லை' என்று கூறினார்கள். மேலும், அணுமின் நிலையத்தை மூடும்படி போராட்டக் குழு தங்களிடம் கூறவில்லை என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. மேலும் வல்லுநர்கள் கூறுகையில்
'கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3வது தலைமுறையை சேர்ந்த முன்னேறிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் முன்னேறி வடிவமைப்பில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டக் குழுவுடன் நடைபெற்ற பேச்சு சுமூகமாக இருந்தது' என்றனர்.
பேச்சுவார்த்தை 'ஒரு தொடக்கம் தான்' : போராட்டக்குழு
நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சுமார் 2 மணிநேரமாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார், தமிழக வல்லுநர் குழுவுடன் நடைபெற்று இந்த பேச்சுவார்த்தை 'ஒரு தொடக்கம் தான்' என்று கூறினார். மேலும் உதயகுமார் கூறுகையில் 'கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களை வல்லுநர் குழு நேரடியாக சந்திக்க வேண்டும். மேலும், போராட்டக்குழுவின் நிபுணர் குழுவுடன் அரசு நியமித்த குழு ஆலோசிக்க வேண்டும். இந்நிலையில் தமது கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு தெரிவிப்பதாக அரசு குழு என்னிடம் கூறியுள்ளது.' எனக் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக வல்லுநர் குழுவின் அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.











Leave a comment