சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட என்கவுன்டர் வேட்டை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் 5 பேர் கும்பல் ரூ.25 லட்சம் கொள்ளையடித்தது. இந்தச் சம்பவத்தின்போது கொள்ளையர்கள் இந்தி மற்றும் தமிழ் பேசியது தெரியவந்தது. இதனால் முக்கிய வங்கிகளைத் தவிர, சிசிடிவி கேமரா, வாட்ச்மேன் இல்லாத வங்கிகளை போலீசார் தேர்வு செய்து, கண்காணிக்கத் தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து, மடிப்பாக்கம் கீழ்க்கட்டளை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதேபோல பகல் 1.30 மணிக்கு 5 கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் உள்ளே புகுந்து ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்தனர். இரு வங்கியிலும் ஒரே நேரத்தில், ஒரே கிழமைகளில், ஒரே வகையான கொள்ளைச் சம்பவம் நடந்ததால், ஒரே கும்பல்தான் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு போலீசார் வந்தனர். இதனால், சிசிடிவி கேமரா உள்ள சில வங்கிகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஸ்டேட் பாங்க் வங்கியில் ஆய்வு செய்தபோது ஒருவன் சந்தேகப்படும்படியாக வங்கியைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
அவன் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீடியோ காட்சியை மேடவாக்கம், பெருங்குடியில் கொள்ளை நடந்த வங்கிகளில் ஊழியர்களிடம் இந்த வீடியோவை காட்டியபோது, அவன்தான் கொள்ளையன் என்பதை உறுதி செய்தனர். பின் அந்த வீடியோவை எடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் போட்டுக் காட்டினர். இதை பார்த்த வேளச்சேரி பெரியார் நகர் நேதாஜி ரோடு ஏ.எல்.முதலி 2வது தெருவில் வசிக்கும் முருகன் என்பவர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது தமிழ்முரசு பத்திரிகையின் போஸ்டரைப் பார்த்துள்ளார். அதில் தனது அக்கா பார்வதி வசிக்கும், வீட்டில் வாடகைக்கு இருக்கும் வினோத்குமார் போன்று இருப்பதை உணர்ந்தார்.
உடனே தனது அக்கா பார்வதியிடம் சொன்னார். அவர் இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு போன் செய்தார். ஆனால், இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப்படையினர், நேற்று முன்தினம் இரவு கிண்டி போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கொள்ளையர்கள் எங்கு இருப்பார்கள், எப்படி இருப்பார்கள், அவர்களை எப்படி எல்லாம் பிடிப்பது என்று பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் படையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியும் இருந்ததால், அவர் போனை எடுக்கவில்லை.
அதேநேரத்தில், எப்படியும் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கருதிய பெண், தனது தம்பி முருகனை அழைத்து, போலீஸ்நிலையம் சென்று புகார் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். அவரும் சைக்கிளில் போலீஸ் நிலையம் வந்து, இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மீட்டிங்கில் இருப்பதால் பார்க்க முடியாது. என்ன விஷயம் என்று காவலர் கேட்டுள்ளார். அவரிடம் விஷயத்தை முருகன் தெரிவிக்கவும், உடனே துணை கமிஷனர் சுதாகரிடம் காவலர் தகவலை தெரிவித்தார்.
இது பற்றி கமிஷனர் திரிபாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திரிபாதி, கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் கிண்டி காவல்நிலையம் வந்தனர். அவர்கள் எப்படி பிடிப்பது என்று ஆய்வு செய்தனர். பின் வீட்டின் வரைபடம் வரையப்பட்டது. அதன்படி ஆயுதங்களுடன் போலீசார் கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசார் சுற்றி வளைத்ததைப் பார்த்த கொள்ளையர்கள், வீட்டுக்குள் இருந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் போலீசாரும் ஜன்னலை உடைத்து அதன் வழியாக சுட்டனர்.
அதேநேரத்தில் தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீல் ஆகியோர் தலைமையிலான போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, கொள்ளையர்களை சுட்டனர். அதேநேரத்தில் கொள்ளையர்களும் போலீசாரை நோக்கிச் சென்றனர். இரு தரப்பிலும் நடந்த சண்டையில் கொள்ளையர்கள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் இரு இன்ஸ்பெக்டர்களும் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட கொள்ளையர்களின் உடல்களை மீட்ட போலீசார், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்கள், ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர். பின் சண்டை நடந்த இடத்துக்கு கமிஷனர் திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்களையும் பார்த்து விசாரணை நடத்தினர்.
அந்த திக்...திக் வினாடிகள்
இரவு 10 மணி: கொள்ளையர்கள் தங்கி இருப்பதாக கிண்டி போலீசாருக்கு ரகசிய தகவல்.
10.15: கிண்டி இன்ஸ்பெக்டர் மீட்டிங்கில் இருப்பதாக புகார் தாரரிடம் ஏட்டு பதில் அளித்தார்.
11.00: கொள்ளையர்கள் குறித்து துணை கமிஷனரிடம் முருகன் புகார் தெரிவிக்கிறார்.
11.35: இணை கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் அவசர ஆலோசனை.
11:50: போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு 12.00: கொள்ளையர்களை சுற்றி வளைக்க கமிஷனர் உத்தரவிடுகிறார்.
12.45: கொள்ளையர்கள் தங்கி இருந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் ஏ.எல்.முதலியார் தெரு வருகிறது.
அதிகாலை 1 மணி: பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. போலீசார் மீது தாக்குதல் நடத்துகின்றனர் கொள்ளையர்கள். போலீசாரின் எதிர் தாக்குதலில் 5 கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலி. 2 இன்ஸ்பெக்டர்கள் காயம்.
2.00: சம்பவ இடம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை இடங்களில் பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டனர்.
2.05: மீட்கப்பட்ட உடல்கள் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
2.15: கமிஷனர் திரிபாதி காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்களை பார்க்க வருகிறார். தொடர்ந்து கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் புகழேந்தி ஆகியோர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்தனர்.
6.00: அனைத்து மக்களும் முற்றுகையிட்டதால் ஏஎல் முதலியார் தெரு பகுதி ஸ்தம்பித்தது.
சென்னையில் முதல் முறையாக 5 பேர் என்கவுன்டர்
இதுவரை நடந்த என்கவுன்டர்கள்:
1996: ஆசைத்தம்பி, கபிலன்
1998: கைபாம் மோகன்
1999: மிலிட்டரி குமார்
2002: சஞ்சய் காட்டியா, முருகேசன், காக்கா ரமேஷ், ஸ்டாலின், சுரா(எ) சுரேஷ், ராஜாராம், புதுக்கோட்டை சரவணன்(ஒரே இடம்), சின்னமாரி உட்பட 3 பேர் (ஒரே இடம்)
2003: அயோத்தியா குப்பம் வீரமணி, வெங்கடேச பண்ணையார்
2005: ரமேஷ், மணிகண்டன்
2006: நாகூரான், பங்க்குமார்
2008: வெள்ளை ரவி, குணா(ஒரே இடம்)
2008: ஜெயக்குமார், சுடலை மணி
2008: பாபா சுரேஷ்
2010: திண்டுக்கல் பாண்டியன், வேலு(ஒரே இடம்)
மாவட்டங்களில்
நடந்த என்கவுன்டர்
2007: மதுரை மாரி முத்து
2008: திருச்சி பாம்பாலாஜி
சிவகாசி சுந்தரமூர்த்தி
கும்பகோணம் மிதுன்
2009: காஞ்சிபுரம் குரங்கு செந்தில்
2010: காஞ்சிபுரம் கொற நடராஜன்
2010: மயிலம் அசோக்குமார்
சாத்தூர் குமார்.
எல்லா என்கவுன்டரிலுமே தனியாகவோ, 3 பேரை மட்டுமோ சுட்டுக் கொன்றனர். ஆனால் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் சென்ற தீவிரவாதி இமாம் அலி மற்றும் அவருடன் இருந்த 4 பேர், தமிழக போலீசாரால் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், சென்னையில் 5 பேர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது இதுதான் முதல்முறை.
நன்றி
தினகரன்











Leave a comment