
ஈரான் பிரச்னை காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை மார்ச் முதல் வாரத்தில் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அணுஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நீண்டகால கோரிக்கையை ஈரான் நிராகரித்து வருகிறது. எனவே, ஈரானை தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஈரானுக்கு பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளையை ஈரான் அதிரடியாக நிறுத்தியது. இதையடுத்து, இந்தியா, சீனா ஆகியவை ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானில் பிரச்னை நிலவுவதால், கச்சா எண்ணெய் விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத வகையில், ஒரு பேரல் விலை 120 டாலராக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, ரூபாய் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.3 வரை இழப்பு ஏற்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், உத்தர பிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக விலை உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளதால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4 வரை உயரும் என்று நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்நிலையில், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3ம், சமையல் எரிவாயு விலையை ரூ.50ம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.14ம், சமையல் எரிவாயு விலையில் சிலிண்டருக்கு ரூ.390ம் நஷ்டம் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினகரன்











Leave a comment