பெண்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண்களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அறிகுறிகள் என்னென்ன?
இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும்.
புகைப்பிடிக்கும் பெண்கள்
இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனை களைச் செய்து கொள்ள வேண்டும்.
புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது.
உடல் எடையை கவனியுங்கள்
மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடையை பராமரிப்பது, சத்தான உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துணவுகள்
ஆரோக்கியமான இருதயத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன.
பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். எனவெ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment