’மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி

 விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெரு விழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) அரவாணிகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) தேரோட்டமும் நடக்கிறது.

இந்த திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அரவாணிகள் விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

விழாவையொட்டி நேற்று காலை விழுப்புரத்தில் அரவாணிகளுக்கான மிஸ் கூவாகம்-2012-க்கான அழகிப்போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அரவாணிகள் (மகளிர்) நலச்சங்க தலைவர் ராதாம்மாள் தலைமை தாங்கினார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் கலந்து கொண்டு அழகிப்போட்டியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக நல வாரியத்துறை தலைவி நடிகை சி.ஆர்.சரஸ்வதி கலந்துகொண்டு பேசும்போது, இந்த திருவிழாவை காண பல ஊர்களில் இருந்து,

மாவட்டங்களில் இருந்து, நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளீர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களது விழா. இதில் நானும் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.


நிகழ்ச்சியில் அரவாணிகளுக்கு விளையாட்டு போட்டி, வினாடி-வினா போட்டி, நடன போட்டி, அழகிப்போட்டி ஆகிய போட்டிகள் நடந்தன. இந்த விளையாட்டு போட்டிகளை முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான அரவாணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அழகிப்போட்டியில் விழுப்புரம், மும்பை, பெங்களூர், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தர்மபுரி, புதுச்சேரி, ஐதராபாத், செகந்திராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அரவாணிகள் கலந்துகொண்டு விதவிதமான கண்ணை கவரும் வகையிலான வண்ண, வண்ண உடைகளில் மேடையில் கவர்ச்சியாக தோன்றி ஒய்யாரமாக நடந்துவந்து பார்வையாளர்களை அசத்தினர்.

அழகிப்போட்டியில் பங்கேற்றவர்களில் நடை, உடை, பாவணையின் அடிப்படையில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பொது அறிவுத்திறன், எய்ட்ஸ், எச்.ஐ.வி.யின் அறிகுறிகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் சிறப்பாக பதில் அளித்த திருவண்ணாமலையை சேர்ந்த ஹரினி "மிஸ் கூவாகம்- 2012'' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையை சேர்ந்த தீபிகா 2-வது இடத்தையும், தர்மபுரியை சேர்ந்த சாயாசிங் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

நடன போட்டியில் மும்பையை சேர்ந்த ரோஜா முதலிடமும், நாகர்கோவில் நிஷா 2-ம் இடமும், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐஸ்வர்யா 3-ம் இடமும் பிடித்தனர். விளையாட்டு போட்டியில் பெங்களூர் பூமிகா முதலிடமும், மாயாவரம் ரமா 2-ம் இடமும், திருவண்ணாமலை மோகி 3-ம் இடமும் பிடித்தனர். வினாடி-வினா போட்டியில் மும்பை ரோஜா முதலிடமும், நாகர்கோவில் நிஷா 2-ம் இடமும், பெங்களூர் நிலா 3-ம் இடமும் பிடித்தனர்.

இதையடுத்து பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை ஹரினிக்கு `ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்பட புகழ் நடிகை மதுமிதா, கிரீடத்தை அணிவித்து பரிசு வழங்கினார்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment