பெங்களூர்: உலக அளவில் இப்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பகிரங்கமாக குரல் கொடுப்பது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்காக பேரணிகள் நடத்துகிறார்கள், கூட்டம் போடுகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள பல கல்லூரிகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக கிளப்களை ஆரம்பிப்பது அதிகரித்து வருகிறதாம்.
முன்பெல்லாம் ரகசியமாக செயல்பட்டு வந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் இப்போது பல்வேறு உரிமைகளைக் கோரும் அளவுக்கு பகிரங்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் பெங்களூரில் உள்ள பல கல்லூரிகளில் ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்ட மாணவ, மாணவியருக்கு ஆதரவாக கிளப்களைத் தொடங்கி வருகிறார்களாம்.
டெல்லி, புனே போன்ற நகரங்களில் இதுபோன்ற கிளப்கள் ஏற்கனவே உள்ளன. இந்த நிலையில் பெங்களூரில் 3 பேர் சேர்ந்து ஒரு கிளப்பை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படிப்பவர்கள். 9 மாதங்களுக்கு முன்பு இவர்கள் கிளப் தொடங்கினர். இதுகுறித்து அவர்களில் ஒருவர் கூறுகையில், ஓரினச்சேர்க்கைப் பழக்கம் கொண்ட பெரியவர்களுக்கு மட்டுமே இதுவரை கிளப்கள் உள்ளன. ஆனால் மாணவ, மாணவியருக்காக அது தொடங்கப்படவில்லை. அந்தக் குறையைத் தீர்க்கத்தான் நாங்கள் தொடங்கியுள்ளோம். நாங்கள் ஓரினச் சேர்க்கைக்கும், அதில் ஈடுபட்டுள்ளோருக்கும் ஆதரவாக இருப்போம் என்றார்.
இதேபோல பல கல்லூரிகளில் அமைதியான முறையில் இப்படிப்பட்ட கிளப்கள் செயல்பட்டு வருகின்றனவாம். விளம்பரம் இல்லாத வகையில்,இவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனராம்.











Leave a comment