பெட்ரோல் விலை உயர்வை தள்ளிப்போட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நாளை அல்லது அதற்கு மறுநாள் முதல் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ள கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. கடந்த ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போது எண்ணெய் விலை உயர்வு இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேபோல், உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்காக கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கிடையில் ஈரான், சிரியா பிரச்னை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடுமையாக உயர்ந்தது.
இதனால் தேர்தல் முடிந்தவுடன் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தன. பெட்ரோல் விலை உயர்வுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது உ.பி.யில் சமாஜ்வாடி அமோக வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதன் குரல் ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பதில் மத்திய அரசு குழம்பி போய் உள்ளது.
குறைந்தபட்சம் 5 அல்லது 6 ரூபாய் உயர்த்த வேண்டும் எனவும், இதற்கு மேலும் காலம் தாழ்த்த கூடாது எனவும் எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை கடந்த இரண்டு நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாளை அல்லது அதற்கு மறுநாள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். எண்ணெய் நிறுவனங்கள் கேட்டு கொண்டது போல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்துவது என்றும் எதிர்ப்பு கிளம்பினால் பின்னர் அதனை ஓரளவு குறைத்து கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி
தினகரன்.











Leave a comment