பெரும்பாலான விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் முக்கிய காரணமாகிறது. குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களால், அவர்கள் மட்டுமின்றி எதிரில் வரும் அப்பாவி வாகன ஓட்டிகளின் உயிர்களையும் பறித்து விடுகின்றனர். மேலும், அவர்களது குடும்பத்தினரின் எதிர்காலமும் ஒரு நொடியில் கேள்விக்குறியாகிவிடுகிறது.குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபரீதங்களை கருத்தில்க்கொண்டு, இதை தடுக்க கடுமையான சட்டங்களை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது. ஆனால், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமே!
இதற்கு ப்ரீத் அனலைசர் என்ற கருவிதான் பயன்படுகிறது. இந்த கருவி மூலம் மது அருந்தியவரை துல்லியமாக கண்டிபிடிக்க முடியுமா? பார்க்கலாம் வாங்க.
மது அருந்தியவரின் ரத்த ஓட்டத்தில் ஆல்கஹால் இலகுவாக கலந்துவிடுகிறது. ரத்த ஓட்டத்தில் கலந்த ஆல்கஹால் நுரையீரலில் இருக்கும் ஆல்வியோலை என்ற நுண் துவாரங்கள் வழியாக ஆவியாகி கரியமில வாயுவுடன் சேர்ந்து சுவாசம் மூலம் வெளியேறும்.
இதுபோன்று சுவாசத்தில் ஆவியாக வெளியேறும் ஆல்கஹால் அளவை வைத்தே ஒருவர் எவ்வளவு குடித்துள்ளார் என்பதை மிகத் துல்லியமாக கணக்கிட்டு கூறிவிடுகிறது ப்ரீத் அனலைசர் கருவி. ஆனால், போதிய அளவு காற்றை ஊதினால்தான் இந்த கருவி துல்லியமாக கணக்கிடும்.
இதில், சிலர் குறைந்த அளவு காற்றை ஊதிவிட்டு தப்பிக்க வழியுண்டு. ஆனால், தற்போது வரும் கருவிகள் போதிய காற்றை ஊதவில்லை என்றால் அதுகுறி்த்த தகவலை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. எனவே, ப்ரீத் அனலைசரை ஏமாற்ற முடியாது.
மேலும், ஸ்ட்ரா போன்ற குழாய் கொண்ட வடிவிலும், டிஜிட்டல் மீட்டர் போன்ற வடிவிலும் ப்ரீத் அனலைசர் கருவிகள் வருகின்றன. இதில், தற்போது பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் ப்ரீத் அனலைசர் கருவிகளில் உள்ள ஸ்ட்ராவில் அனைவரும் வாய் வைத்து ஊத வேண்டியிருக்கிறது.
இதற்கு பதில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் வகையில் டிஸ்போசல் ஸ்ட்ரா கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைள் எழுந்துள்ளது. டிஸ்போசல் ஸ்ட்ராவை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.











Leave a comment