கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னை தொடர்பாக போராட்டக்குழுவினர் நடத்தி வரும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை சுமூகமாக முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கடலோர கிராமங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ரூ.500 கோடிக்கான திட்டங்கள் மற்றும் 7 மாத காலத்தில் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் வாங்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்க ஏடிஜிபி ஜார்ஜ் இன்று நெல்லை வந்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அமைச்சரவை ஆதரவு அளித்ததையொட்டி அங்கு கடந்த 18ம் தேதி இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். 

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேர் உட்பட 950 பேர் வேலைக்கு வந்தனர். அங்கு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னையில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர் புஷ்பராயன் உள்ளிட்ட 15 பேர் கடந்த 19ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 6வது நாளான இன்றும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையே சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட போராட்டக்குழுவினர் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். கடந்த 7 மாதங்களாக போராட்டக்குழு மற்றும் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே தமிழக அரசும் இந்த போராட்டத்தை சுமூகமாக முடிக்க திட்டமிட்டுள்ளது. போராட்டக்காரர்களை கோர்ட் உத்தரவு பெற்று கைது செய்வது என்றும், அவர்கள் தவிர பொதுமக்கள் மீது 7 மாத  போராட்டக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குவது குறித்து ஆலோசிப்பது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது. இது தவிர  கூடங்குளத்தில் சிறப்பு வளர்ச்சி பணிகளுக்காக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்தபடி ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள், அணுமின்நிலைய பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க இன்று கூடங்குளத்திற்கு ஏடிஜிபி ஜார்ஜ் கூடங்குளம் வந்தார். அங்கு அணுமின்நிலைய அதிகாரிகளுடனும், போலீஸ் அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ரூ.500 கோடி திட்டங்கள் குறித்து அணுமின்நிலைய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.  கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விடுமுறை நாளான இன்றும் முழுவீச்சில் பணிகள் நடந்தன. வழக்கம் போல் அனைத்துப் பணியாளர்களும் வேலைக்கு வந்தனர். 7 மாதங்களாக முடங்கி கிடந்த பணிகளை விரைவில் முடிக்க 3 ஷிப்ட்களில் பொது விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment