சென்னை: பல இளைஞர்களை காதல் வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்த கேரளவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆர்.சரவணன், அடையாறை சேர்ந்த ஏ.சரவணன், தியாகராய நகரை சேர்ந்த ராஜா ஆகிய 3 பேரும் புகார் மனுக்களைக் கொடுத்தனர். அதில், பெண் ஒருவர் தங்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி ரூ.10 லட்சம் வரை
பணத்தை பறித்து விட்டதாக புகார் கூறியுள்ளனர்.
இவர்கள் 3 பேரிடமும் ஒரு பெண் முதலில் செல்போன் மூலம் பேசி இருக்கிறார். தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் நேரிலும் பலமுறை சந்தித்துள்ளார். செக்ஸ் வலையிலும் வீழ்த்தியதோடு திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். சொந்த ஊரான
திருவனந்தபுரம் போக வேண்டும், வீட்டில் பணப் பிரச்சனை என்று காரணம் கூறி அவ்வப்போது பணமும் வசூலித்துள்ளார்.
மலையாளம் கலந்த தமிழில் பேசியுள்ள அந்தப் பெண்ணை இவர்கள் செல்போனிலும் படம் பிடித்துள்ளனர். அதையும் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் பலரும் அந்தப் பெண்ணிடம் மோசம் போய் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணிடம் மேலும் யாரும் மோசம் போகாமல் இருக்கவும், ஏமாந்தவர்கள் புகார் கொடுப்பதற்காகவும் அந்த பெண்ணின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம்.











Leave a comment